Tuesday, November 6, 2012
Monday, November 5, 2012
சிறுநீரக நோய்களைத் தவிர்க்கும் வழிமுறைகள்..!
To: tamilmanram@googlegroups.com
From: mathan.dxb@gmail.com
Date: Sun, 4 Nov 2012 21:46:13 +0400
Subject: [Tamil_Araichchi] சிறுநீரக நோய்களைத் தவிர்க்கும் வழிமுறைகள்..!
சிறுநீரக நோய்களைத் தவிர்க்கும் வழிமுறைகள்..!
[Saturday, 2012-11-03 22:14:21]
இந்தியாவில் கோடிக் கணக்கானோர் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு ஆரம்ப கட்டம் முதல் முற்றிய நிலை வரை உள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஆண்டுக்கு ஆண்டு இது அதிகரித்து வருவதாகவும், வியாதி முற்றிய நிலையில் சிறுநீரகம், செயலிழப்பு ஏற்பட்டு அவர்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுவதாகவும் ஒரு தகவல் கூறுகிறது. பெரும்பாலானவர்களுக்கு சிறுநீரக வியாதிகள் இருப்பது நோய் முற்றிய நிலையில்தான் அவர்களுக்கு தெரிய வருகிறது.
சிறு நீரக வியாதிகளை பல்வேறு பரிசோதனைகள் மூலம் ஆரம்பத்திலே கண்டுபிடித்தால் அவற்றை குணப்படுத்துவதும் கட்டுப்படுத்துவதும் மிக எளிது என்கிறார் பிரபல சிறுநீரக மருத்துவ நிபுணர் டாக்டர் ஜெயச்சந்திரன். சிறு நீரகம் பற்றியும் சிறுநீரக கோளாறு பற்றியும் அவர் இங்கே விவரிக்கிறார். மனிதன் உயிர் வாழ இன்றியமையாத அங்கங்களில் சிறு நீரகமும் ஒன்று.
இது மிகச் சிறிய உறுப்பாக இருந்தாலும் அதன் பணிகள் வியக்கத்தக்கது. ஒவ்வொரு மனிதனுக்கும் இரு சிறுநீரகங்கள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் இருபுறமும் விலா எலும்புக்கு கீழே பின்புறத்தில் இரண்டு பக்கங்களிலும் அமைந்துள்ளது. ஒவ்வொரு சிறுநீரகமும், 10.5 முதல் 11.5 செ.மீ. வரை நீளமும், 4.5 முதல் 5.5 செ.மீ. வரை பருமனும் கொண்டது. அவரை விதை அளவு வடிவில்தான் சிறுநீரகம் இருக்கும்.
ஆனால் அதன் செயல்பாடோ மிக உயர்ந்தது. நம் உடலில் உருவாகும் கழிவுகளை அகற்றும் முக்கிய பணியை சிறுநீரகம் கவனிக்கிறது. அத்துடன் ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருப்பது, எலும்புகளை உறுதிப்படுத்துவது, ரத்தச் சிவப்பனுக்களின் உற்பத்தியை தூண்டுவது, உடலின் நீர்- அமிலப் பொருள்களின் அளவை சீரான அளவில் கட்டுப்படுத்துவது போன்றவை சிறுநீரகத்தின் பணிகளாகும்.
நாம் உண்ணும் உணவு ஜீரண உறுப்புகளால் சத்தாக மாற்றப்பட்டு ரத்தத்தில் கலந்து உடல் உறுப்புகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இதே போல் உடல் உறுப்புகள் வெளியேற்றும் கழிவுகளும் ரத்தத்தில் கலந்து சீறு நீரகங்களுக்கு வருகிறது. ரத்தத்தில் கலந்து வரும் கழிவுகளான யூரியா, கிரியாட்டினன் போன்றவற்றை சிறு நீரகங்கள் பிரித்து சிறுநீராக வெளியேற்றுகிறது.
ஒருவரது உடலில் இருந்து அன்றாடம் சராசரியாக 1,500 மில்லி முதல் 2500 மில்லி வரை சிறுநீர் பிரிகிறது. சிறுநீரகங்கள் செயல் இழப்பு ஏற்பட்டு கழிவுகள் வெளியேறாமல் தங்கிவிடும் போதுதான் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. சிறுநீரகங்கள் ஏன் பாதிக்கப்படுகிறது? முக்கியமாக ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதை சரியாக கவனிக்காமல் விட்டு விடுவதால் சிறுநீரக பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.
ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்காமல் விட்டால் உடலில் திரவம் மற்றும் தேவையற்ற கழிவு பொருட்கள் தேங்கி யூரியா, கிரியாட்டினன் ஏற்படுகிறது. இவை சிறு நீரகத்தை பாதிப்படையச் செய்கிறது. எனவே சர்க்கரை வியாதி உள்ளவர்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும், ரத்த அழுத்தத்தினையும் கட்டுக்குள் வைத்துக் கொள்ளவேண்டும்.
இதன் மூலம் சிறு நீரகம் செயல் இழப்பை தடுக்க முடியும். அடுத்ததாக சிறுநீரக கற்கள், சிறு நீர்பையில் ஏற்படும் சிறுநீர் தொற்று சிறுநீர் இறங்காமை, போன்றவைகளாலும் சிறுநீரகம் செயலிழப்பு ஏற்படுகிறது. சிறுநீரகத்தில் கல் எப்படி உருவாகிறது என்று பார்த்தோமேயானால் இதற்கு உணவுப்பழக்கம் மட்டுமே காரணம் என்று கூற முடியாது.
புரதச்சத்து சிதைப்பிற்கு பின்பு யூரிக் அமிலம் என்ற கழிவுப் பொருள் ரத்தத்தில் உண்டாகிறது. இது ரத்தத்தில் மிகுதியான அளவில் வரும் போது கற்களாக படிவதுண்டு. இதே போல் நாம் உண்ணும் உணவில் இருந்து தேவையான கால்சியம் நமக்கு கிடைக்கிறது.
இது தவிர நாம் மாத்திரைகளாகவோ, உணவாகவோ எடுக்கும் போது அதிகப்படியான கால்சியம் சிறுநீரில் கழிவு பொருளாக வெளியேறுகிறது. இப்படிப்பட்ட சமயங்களில் கால்சியம் மூலகங்கள் சேர்ந்து சிறுநீர் தாரைகளில் படிகங்களாக படிந்து பின் கற்களாக மாறுகின்றன சிறுநீரக கல் 3 மி.மீ.முதல் 4 மி.மீ. அளவே இருக்கும். இதற்கு நிறையப் பேர் பயப்படுகிறார்கள்.
100-க்கு 30 முதல் 35 பேர் வரை சிறுநீர் கல் இருக்கும். ஆனால் அவர்களுக்கு தானாகவே சிறுநீருடன் கல் வெளியேறி விடும். சிறுநீர் கல் பெரிதாகி நீர்வரத்து நின்று இதன் மூலம் நீர் தொற்று ஏற்பட்டு அதனால் சிறுநீரகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. தண்ணீர் அதிகம் குடிப்பதன் மூலம் சிறுநீரக கல் தானாகவே கரைந்து வெளியேறி விடும்.
தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் சிறுநீரக கல் பெரிதாக இருந்தால் அதை உடைத்து வெளியேற்ற வேண்டுமாப டியூப் போட்டு எடுக்க வேண்டுமாப யூரிட்ராஸ்கோபி மூலமாக எடுக்க வேண்டுமா? என்பதை பரிசோதித்து பார்க்க வேண்டும். சிறுநீர் கல் ஏற்படும் போது தண்ணீர் அதிக அளவு குடித்தால் சிறுநீர் அதிக அளவு வெளியேறும் போது சிறுநீர் குழாய் விரிவடைந்து அதன் மூலம் கல் வெளியேறி விடுகிறது.
கல் பரிசோதனை மூலம் எந்த முறையை கடைப்பிடிப்பது என்பதை முடிவு செய்ய வேண்டும். மது குடிப்பதாலும் சிறுநீரக கல் உருவாகும் வாய்ப்பு அதிகம். எனவே மது பழக்கத்தை விட்டு விட வேண்டும். கற்களின் ரசாயன குணத்திற்கு தக்கவாறு உணவு உட்கொள்வதை மாற்றிக் கொள்ள வேண்டும். பாட்டிலில், அடைத்த கோலா பானங்களை தவிர்க்க வேண்டும்.
மாமிசத்தை அளவு குறைத்து உண்ண வேண்டும். சாக்லேட் மற்றும் கிரீம் பிஸ்கட், கிரீம் கேக் போன்றவற்றை தவிர்க்கவேண்டும். வெயில் காலம் என்றால் 2 முதல் 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதில் பால், மோர், காபி, டீ ஆகியவையும் அடங்கும். மழைக் காலங்களில் 1 முதல் 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீரை அதிகமாகவும் குடிக்க கூடாது.
இதனால் பக்க விளைவுகள் ஏற்படும். நிறைய தண்ணீர் குடிப்பதன் மூலம் உப்பு கரைந்து வெளியேறுவதால் கை-கால் அசதி ஏற்படும். நன்றாக வேலை செய்யும் சிறு நீரகத்தை தண்டித்தது போல் ஆகிவிடும். அதற்காக தண்ணீரே குடிக்காமல் இருக்கவும் கூடாது. உப்பு, காரம் போன்றவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும்.
அதிகமான பழங்கள், காய்கறிகளை உணவில் சேர்க்க வேண்டும், பருப்பு மற்றும் விதை வகைகள் குறைந்த கொழுப்பு சத்துள்ள பால் பொருட்களை உட்கொள்ள வேண்டும். ஒரு முறை சிறுநீரகத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கற்கள் வந்து விட்டால், அடுத்தடுத்து கற்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் உண்டு.
பெற்றோர்களுக்கோ, முன்னோர்களுக்கோ சிறுநீரக பாதிப்பு இருக்குமேயானால் வாரிசுகளுக்கும் இந்நோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். சிறுநீரகத்தில் இருந்து கல் வெளியேறி குறுகிய சிறுநீர்க் குழாயில் நுழைந்து வெளியேற முடியாமல் தடை படும் போது தாங்க முடியாத வலி ஏற்படும். சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல் உண்டாகும். இக்கற்கள் பெரும்பாலும் கடுமையான வயிற்று வலியை ஏற்படுத்தும், இந்த வலி முதுகின் மேல்புறம் விலா எலும்புகள் முடியும் இடத்தில் ஏற்படும்.
கற்கள் சிறுநீர்க்குழாயில் இருந்தால் வலி மேலிருந்து கீழாக விட்டு விட்டுத் தொடரும். சிறு குழந்தைகளுக்கு மூத்திரப்பாதை வழியாக சிறுநீர் வெளியேறும் போது சிறிதளவு நீர் மீண்டும் சிறுநீர் பாதை வழியாக உள்ளே சென்று விடுகிறது. இதன் மூலமும் நீர் தொற்று ஏற்பட்டு சிறுநீரகம் பழுதடைய வாய்ப்பு உள்ளது.
சில குழந்தைகளுக்கு நீர் வரும் பாதையில் சிறுநீர் பிரிவதில் தடை இருந்தாலும் சிறுநீரகம் வீங்கி நாளடைவில் செயல் இழக்கும் அபாயம் உள்ளது. வயதானவர்கள் சிறுநீரக கோளாறால் அதி கம் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு காரணம் அவர்களுக்கு நீர் பிரியாமல் தங்கி இருந்தால் நீர் தொற்று ஏற்பட்டு சிறுநீர் வெளியேற்றம் பாதிக்கப்படும்.
சிறுநீரக கோளாறு அறிகுறிகளாக திடீர் என உடல் எடை இழப்பு, குமட்டல், வாந்தி, சோர்வு, வெளியேறும் சிறுநீரின் அளவு கூடுவது அல்லது குறைவது, இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சுலபமாக காயம் ஏற்படுதல், அல்லது ரத்தம் வடிதல், வாந்தியில் அல்லது மலத்தில் ரத்தம் காணப்படுதல், சுறு சுறுப்பின்மை, அதிக தாகம் ஏற்படுதல், உயர் ரத்த அழுத்தம், பசியின்மை போன்றவை இருக்கும்.
இவை ஆரம்ப நிலை அறிகுறிகளாகும். தொடர்ந்து 2 வாரங்களுக்கு மேல் குமட்டல் அல்லது வாந்தி இருந்தாலோ அன்றாடம் வெளியேறும் சிறுநீரின் அளவு குறைந்தாலோ அல்லது சிறுநீரக செயல் இழப்பிற்கான அறிகுறிகள் தோன்றினாலோ மருத்துவரை அணுக வேண்டும். சிறுநீர் பரிசோதனை யூரியா, கிரியாட்டினன் ரத்த பரிசோதனை, எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், போன்றவை மூலம் சிறுநீரக பாதிப்பை முன் கூட்டியே கண்டு பிடித்து உரிய சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே பூரணமாக குணப்படுத்தி விடலாம்.
சிறு குழந்தைகளுக்கு டி.எம்.எஸ்.ஏ. ஸ்கேன் செய்தால் பாதிப்பு இருக்கிறதா? என்பது தெரிய வரும். நம் உடலில் உள்ள இரு சிறுநீரகங்களில் ஒன்று கெட்டுப்போனாலும் எந்த பாதிப்பும் இருக்காது. மற்றொன்றின் மூலம் உயிர் வாழலாம். 2 சிறுநீரகங்களும் பழுதானால் ஆபத்தாக முடியும், சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டால் டயாலிசிஸ் மூலம் ரத்தத்தை சுத்திகரிப்பு செய்ய வேண்டும். வாரம் 3 முறை டயாலிசிஸ் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.
இது நிரந்தர தீர்வாக இருக்காது. இரு சிறு நீரகங்களும் செயல் இழந்து போனால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைதான் இதற்கு ஒரே நிரந்தர தீர்வு. ரத்தம் சம்பந்தப்பட்ட உறவினர்கள் மூலமாகவோ சிறுநீரகம் தானம் கொடுப்பவர்கள் மூலமாகவோ ஒரு சிறுநீரகத்தை தானமாக பெற்று அறுவை சிகிச்சை மூலம் நோயாளிகளுக்கு பொருத்தி அதன் மூலம் உயிர் வாழ வைக்கலாம். எனவே சிறுநீரக செயல் இழப்பை உருவாக்கும் மூலக் கூறுகளில் இருந்து முன்கூட்டியே நம்மை பாதுகாத்துக் கொண்டால் என்றென்றும் நாம் ஆரோக்கியமாக வாழலாம்.
-டாக்டர் ஜெயச்சந்திரன்-
Subscribe to:
Posts (Atom)